search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் தங்கமணி"

    காற்றாலை மின்சாரத்தில் ஊழல் என்று மு.க.ஸ்டாலின் கூறுவது உண்மைக்கு புறம்பானது என்று தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் ஆய்வு செய்த பின்னர் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். #TNMinister #Thangamani #DMK #MKStalin
    தூத்துக்குடி:

    தமிழகத்தில் மின் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிப்பது தூத்துக்குடி அனல் மின்நிலையம். இங்கு தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 5 யூனிட்டுகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் தினமும் 1,050 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    முதல் மூன்று யூனிட்கள் 30 ஆண்டுகளை கடந்தவை என்பதால் அடிக்கடி பழுது ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இங்கு இயங்கிவந்த இரு யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

    நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தமிழக மின் வாரிய அமைச்சர் தங்கமணி இன்று தூத்துக்குடிக்கு வந்தார். தூத்துக்குடி அனல் மின்நிலையத்துக்கு வந்த அவர் அங்கு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    இதைத்தொடர்ந்து அவர் அனல்மின் நிலைய அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது மின் உற்பத்தி தடைபடாமல் தொடர்ந்து நடைபெற உரிய ஆலோசனைகளை வழங்கினார்.

    பின்னர் அமைச்சர் தங்கமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

    தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாடு இல்லை. தற்போது இங்கு 1 லட்சத்து 2 ஆயிரம் டன் நிலக்கரி இருப்பு உள்ளது. வருகிற 25‍-ந்தேதி ஒரு கப்பலில் நிலக்கரி வர உள்ளது. இதனால் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்படாது.

    தமிழகத்தில் தற்போதைய சூழலில் காற்றாலைகள் மூலமாக 3500 மெகாவாட், சூரிய சக்தி மூலமாக 1500 மெகாவாட், தண்ணீர் மூலம் 2500 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. மின் உற்பத்தி அதிகமாக இருப்பதாலேயே தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தது. நிலக்கரி தட்டுப்பாடு என்பது தவறான தகவல்.

    தமிழகத்தில் புதிதாக 4 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் வகையில் உடன்குடி, எண்ணூர், வடசென்னை ஆகிய இடங்களில் புதிய அனல் மின்நிலையங்கள் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க கடல் நீரை சுத்தம் செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மழை நீரை சேகரிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.


    காற்றாலை மின்சாரத்தில் ஊழல் என்று மு.க.ஸ்டாலின் கூறுவது உண்மைக்கு புறம்பானது. தனியார் நிறுவனம்தான் அரசுக்கு ரூ9.17 கோடி செலுத்தவேண்டியுள்ளது.

    பாளையங்கோட்டையில் 50 கிலோவாட் மின்சக்தி திறன் கொண்ட துணை மின் நிலையத்தை 80 கிலோவாட் சக்தி கொண்டதாக மாற்ற திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்குவதாக இருந்தது. அதற்காகவே மின்தடை அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது அத்திட்டம் கைவிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #TNMinister #Thangamani #DMK #MKStalin

    தூத்துக்குடி அனல் மின்நிலையத்துக்கு வந்த அமைச்சர் தங்கமணி அங்கு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவருடன் மின்வாரிய அதிகாரிகள் உடன் சென்றனர். #TNMinister #Thangamani
    தூத்துக்குடி:

    தமிழகத்தில் மின் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிப்பது தூத்துக்குடி அனல் மின்நிலையம். இங்கு தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 5 யூனிட்டுகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் தினமும் 1,050 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய முடியும். முதல் மூன்று யூனிட்கள் 30 ஆண்டுகளை கடந்தவை என்பதால் அடிக்கடி பழுது ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முதல் 2 யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தபப்ட்டது.

    இதனால் தற்போது 860 முதல் 890 மெகாவாட் வரையே மின்உற்பத்தி செய்யப்படுகிறது. இதனிடையே 2-வது யூனிட் நேற்று முன்தினம் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதாக தெரியவந்தது.

    ஆனால் அதிகாரிகள் தரப்பில் இதை மறுத்தனர். 6 நாட்கள் வரை மின்உற்பத்தி செய்வதற்கு போதுமான நிலக்கரி உள்ளது. இதனால் தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை’ என அதிகாரிகள் கூறினர்.

    அனல்மின் நிலையத்தில் நிலக்கரி குவித்து வைக்கப்பட்டுள்ள காட்சி.

    இந்த நிலையில் தமிழக மின்வாரிய அமைச்சர் தங்கமணி இன்று காலை தூத்துக்குடிக்கு வந்தார். தூத்துக்குடி அனல் மின்நிலையத்துக்கு வந்த அவர் அங்கு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவருடன் மின்வாரிய அதிகாரிகள் உடன் சென்றனர்.

    இதைத்தொடர்ந்து அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது மின்உற்பத்தி தடைபடாமல் தொடர்ந்து நடைபெற செய்ய உரிய ஆலோசனைகளை வழங்கினார். #TNMinister #Thangamani

    தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி குறித்து வாட்ஸ்அப்பில் அவதூறு பரப்பியதாக முன்னாள் பெண் எம்.எல்.ஏ. சரஸ்வதியை நாமக்கல் போலீசார் கைது செய்தனர்.
    நாமக்கல்:

    நாமக்கல் முல்லை நகரை சேர்ந்தவர் சரஸ்வதி (60).

    இவர் கடந்த 1995-ம் ஆண்டு கபிலர் மலை சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அ.தி.மு.க.விலிருந்து விலகி தி.மு.க-வில் சேர்ந்தார்.

    இந்நிலையில் கீரம்பூரை சேர்ந்த அ.தி.மு.க. கிளை கழக செயலாளர் ராஜா நாமக்கல் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில், தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி குறித்து முன்னாள் எம்.எல்.ஏ சரஸ்வதி வாட்ஸ் அப்பில் அவதூறு தகவலை பரப்பி வருகிறார். இது குறித்து அவரிடம் கேட்ட போது ஆபாச வார்த்தைகளால் திட்டி மிரட்டினார் என புகாரில் தெரிவித்தார்.

    இதனைதொடர்ந்து முல்லை நகரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற நாமக்கல் இன்ஸ்பெக்டர் குலசேகரன் மற்றும் போலீசார் சரஸ்வதியை இன்று காலை கைது செய்தனர். அவர் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    நாமக்கல் மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தகவலறிந்து தி.மு.க. கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் காந்திசெல்வன் மற்றும் திமுகவினர் கைது செய்யப்பட்ட சரஸ்வதியை பார்க்க வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    தமிழகத்தில் மின்வெட்டு இருப்பதாக எதிர்க்கட்சிகள் தவறான பிரச்சாரம் செய்வதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். #MinisterThangamani
    புதுடெல்லி:

    தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி டெல்லியில் இன்று மத்திய ரெயில்வே மற்றும் நிலக்கரித்துறை மந்திரி பியூஸ் கோயலை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தங்கமணி கூறியதாவது:-

    தமிழகத்தில் நிலக்கரி கையிருப்பை அதிகரிப்பதற்காக மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். கூடுதல் நிலக்கரி வழங்குவதாக மத்திய அரசு கூறியுள்ளது. தினமும் நிலக்கரி அனுப்புவதாகவும் கூறியுள்ளார்கள்.



    தமிழகத்தில் மழை காரணமாக மின்சார தேவை குறைந்திருப்பதால் உற்பத்தியையும் குறைத்திருக்கிறோம். வடசென்னையில் 3 நாட்களுக்கான  நிலக்கரியும், தூத்துக்குடியில் 6 நாட்களுக்கான நிலக்கரியும் கையிருப்பு உள்ளது. ஒடிசாவில் ஏற்பட்ட மழை காரணமாகவே கடந்த வாரத்திற்கான நிலக்கரி கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டது.

    தமிழகத்தில் மின்வெட்டு என எதிர்க்கட்சிகள் தவறான பிரச்சாரம் செய்து வருகின்றன. அரசியல் செய்வதற்காக மின்வெட்டு இருப்பதாக பேசி வருகிறார்கள். தமிழகத்தில் எந்த சூழ்நிலையிலும் மின்வெட்டு என்பதே வராது.

    இவ்வாறு அவர் கூறினார். #MinisterThangamani

    தமிழகத்துக்கு கூடுதல் நிலக்கரி பெறுவதற்காக அமைச்சர் தங்கமணி நேற்று டெல்லி புறப்பட்டார். இன்று மத்திய மந்திரிகளை சந்தித்து கோரிக்கை வைக்கிறார். #MinisterThangamani
    சென்னை:

    தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு இருப்பதாகவும், போதுமான அளவு நிலக்கரி கையிருப்பு இல்லை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்த நிலையில், கூடுதல் நிலக்கரி பெறுவதற்காக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி நேற்று அவசரமாக டெல்லி புறப்பட்டார். அவருடன் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத் தலைவர் விக்ரம் கபூரும் டெல்லி சென்றார்.

    அமைச்சர் தங்கமணி, இன்று மத்திய ரெயில்வே மற்றும் நிலக்கரித்துறை மந்திரி பியூஸ் கோயல் மற்றும் மத்திய மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ராஜாங்க மந்திரி(தனி பொறுப்பு) ஆர்.கே.சிங் ஆகியோரை சந்திக்க இருக்கிறார். தனது டெல்லி பயணம் குறித்து அமைச்சர் தங்கமணி ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் தற்போது மின் பற்றாக்குறை மற்றும் நிலக்கரி பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடம் இல்லை. தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் 6 நாட்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது. அதே போன்று வடசென்னை அனல் மின்நிலையத்தில் 4 நாட்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது. மேட்டூர் அனல் மின்நிலையத்தில் 3 நாட்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது.

    இந்த நிலையில் நேற்று பெய்த மழையின் காரணமாக தமிழகத்தில் மின் தேவை குறைந்து உள்ளது. இதனால் மேட்டூர் அனல் மின்நிலையத்தில் 420 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனினும், நிலக்கரி கையிருப்பை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர் விக்ரம் கபூருடன் டெல்லி செல்கிறேன்.

    இன்று மத்திய ரெயில்வே மற்றும் நிலக்கரித்துறை மந்திரி பியூஸ் கோயலை சந்திக்கிறேன். அவரிடம் கூடுதலான வேகன்களில் நிலக்கரி அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை வைக்க இருக்கிறேன். அதாவது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதிய பிறகு 10 வேகன்களில் வந்த நிலக்கரியானது தற்போது 13 வேகன்களில் வந்து கொண்டு இருக்கிறது. இந்த எண்ணிக்கையையும் அதிகரித்து 20 வேகன்கள் வேண்டும் என கோரிக்கை வைக்க உள்ளேன். நிலக்கரி கையிருப்பு தற்போது நிறைய மாநிலங்களிலும் குறைவாகத்தான் இருக்கிறது.

    மேலும் மத்திய மின் தொகுப்பில் இருந்து 6 ஆயிரத்து 152 மெகாவாட் மின்சாரம் தமிழகத்துக்கு தர வேண்டும். ஆனால், தற்போது 3 ஆயிரத்து 300 மெகாவாட் மின்சாரம் தான் தரப்படுகிறது. எனவே, எஞ்சிய 2 ஆயிரத்து 852 மெகாவாட் மின்சாரத்தையும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வைக்க இருக்கிறேன். இது தொடர்பாக மத்திய மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை ராஜாங்க மந்திரி(தனி பொறுப்பு) ஆர்.கே.சிங்கையும் சந்தித்து பேச இருக்கிறேன்.

    தனியாரிடம் இருந்து 2 ஆயிரத்து 830 மெகாவாட் மின்சாரம் பெற வேண்டும். ஆனால், தற்போது 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தான் பெறப்படுகிறது. எனவே அதனையும் முழுமையாக பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள உள்ளோம். எந்த விதத்திலும் தமிழகத்தில் மின்பாதிப்பு இல்லை, மின் வெட்டு இல்லை.

    அரசியலுக்காக தவறான செய்திகளை பரப்பி மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்த வேண்டாம் என அரசியல் தலைவர்களிடம் கேட்டுக்கொள்கிறேன். தமிழகம் மின் மிகை மாநிலம் என்ற பெயரை அ.தி.மு.க. அரசு எப்போதும் நிலைநாட்டும். தற்போது 15 நாட்களுக்கான நிலக்கரி கையிருப்பு வைக்க வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். அந்த வகையில் நிலக்கரி அனுப்ப வேண்டும் என்பதற்காக மத்திய மந்திரியிடம் கோரிக்கை வைப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #MinisterThangamani

    தமிழகத்தில் மின்வெட்டு நிலவுவதாக திட்டமிட்டு வதந்தியை பரப்புகிறார்கள் என்று அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். #MinisterThangamani #PowerShortage #TNGovernment

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பொன்.சரஸ்வதி தலைமை தாங்கினார்.

    இந்த கூட்டத்தில் அமைச்சர் தங்கமணி பேசியதாவது:-

    அண்ணா பிறந்த நாள் பொதுக் கூட்டத்தை நடத்துவதற்கு முழு உரிமை உள்ள இயக்கம் அ.தி.மு.க. தான்.

    ஜெயலலிதா ஆட்சி எடப்பாடி பழனிசாமி தலைமையில் சிறப்பாக நடைபெற்று வருவதை பொறுத்துக்கொள்ள முடியாத எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினும், கழகத்திற்கு துரோகம் விளைவித்த தினகரன் மக்களிடையே பீதியை ஏற்படுத்தும் வகையில் மின்வெட்டு வரப்போகிறது என்று பேசி வருகிறார். அது முற்றிலும் தவறானது.

    ஏனென்றால் ஜெயலலிதா இருக்கும்போதே தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றி அமைத்துள்ளார். இந்திய சமன்பாட்டு அறிக்கை கூட தமிழகம் மின்மிகை மாநிலமாக உள்ளது என அறிக்கை வழங்கியுள்ளது.

    கடந்த 9-ந் தேதியும் 10-ந் தேதியும் மத்திய தொகுப்பிலிருந்து வரவேண்டிய மின்சாரம் பராமரிப்பு பணிக்காக வழங்கப்படவில்லை. அதேபோல காற்றாலை மின்சாரம் இருந்த காரணத்தால் அனல் மின்சார தயாரிக்கும் பணியை நிறுத்திருந்தோம். திடீரென்று காற்றாலை மின்சாரம் வராத காரணத்தால் அனல் மின்சார உற்பத்தியை திடீரென கொடுக்க முடியாத சூழலில் இருந்தோம்.

    ‌அதை அடுத்த நாளே சரிசெய்து சகஜ நிலைக்கு திருப்பி அமைத்து விட்டோம். மின் விநியோகம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து தற்போது நிலக்கரி இல்லை என்று வதந்திகளை பரப்பி வருகிறார்கள்.

     


    நிலக்கரி குறித்து பிரதமருக்கு முதல்வர் எழுதியுள்ள கடிதம் ஒரு நினைவூட்டல் கடிதம் தான். ஏற்கனவே தமிழகத்திற்கு அதிக நிலக்கரி வழங்க வேண்டும் என்று முதல்வர் கேட்டுள்ளார். அதற்கான நினைவூட்டல் கடிதம் தான் அது.

    தி.மு.க. ஆட்சியில் மின்வெட்டே இல்லாத போலவும், இந்த ஆட்சியில் தான் மின்வெட்டு இருப்பது போலவும் பேசி வருகிறார்கள். மின்வெட்டு குறித்து பேசுவதற்கு தி.மு.க.வுக்கு அருகதை இல்லை.

    முதல்வர், பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார். நானும் ரெயில்வே மந்திரிக்கு கடிதம் எழுதியுள்ளேன். வருகிற 18-ம் தேதி மத்திய ரெயில்வே மந்திரியை சந்தித்து அதிக வேகன்களில் நிலக்கரியை ஏற்றி வந்து வழங்க வேண்டுமென்று கேட்க உள்ளேன்.

    நிலக்கரியை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதற்கான டெண்டர் கோரப்பட்டு உள்ளது. இன்னும் 20, 25 நாள்களில் அந்த நிலக்கரியும் வந்து சேரும்.

    ஆகவே, மக்கள் வதந்தியை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். மேலும் கூடங்குளத்தில் 400 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. எனவே தமிழகத்தில் ஒருபோதும் மின்வெட்டு வராது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த பொதுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் விஜய் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். #MinisterThangamani #PowerShortage #TNGovernment

    தமிழகம் முழுவதும் தற்போது சீரான மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது என்று மதுரையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். #TNMinister #thangamani
    மதுரை:

    மதுரையில் மின்துறை அமைச்சர் தங்கமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் தற்போது மின்வெட்டு எதுவும் இல்லை. ஒருசில பகுதிகளில் மின்வாரிய பராமரிப்பு பணிகள் மற்றும் காற்றாலைகள் மூலம் மின்சாரம் கிடைப்பதில் சிக்கல் நிலவி வந்தது. ஆனாலும் அனல் மின் நிலையத்தின் மூலம் மின் தேவை சரிசெய்யப்பட்டுள்ளது.

    எனவே தற்போது தமிழகம் முழுவதும் சீரான மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.


    தி.மு.க. ஆட்சியில்தான் தரமற்ற நிலக்கரி கூடுதல் விலைக்கு வாங்கப்பட்டு மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. அந்த ஆட்சி மின்வெட்டு ஆட்சியாக இருந்தது. ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் மின்துறை சீர் செய்யப்பட்டு தேவைக்கு அதிகமான மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #TNMinister #thangamani
    அமைச்சர் தங்கமணி ஊழலையும் மின்வெட்டையும் மூடி மறைப்பதாக தி.மு.க. எம்.எல்.ஏ. எ.வ.வேலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கண்டனம் தெரிவித்துள்ளார். #DMK #AVVelu #TNMinister #Thangamani
    சென்னை:

    தி.மு.க. எம்.எல்.ஏ. எ.வ.வேலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்றைய தினம் “தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில்” நடைபெறும் ஊழல்களையும், மின்வெட்டை நோக்கி தமிழகம் நகர்ந்து கொண்டிருப்பதையும் சுட்டிக்காட்டி வெளியிட்ட அறிக்கைக்கு பதில் சொல்ல நினைத்து, “தமிழ்நாட்டில் மின்வெட்டே இல்லை” என்றும் “தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தில் ஊழலே நடக்கவில்லை” என்றும் “இலைச் சோற்றுக்குள் இமய மலையை” திணித்து மறைக்க முயன்ற மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

    “தமிழ்நாடு மின்வெட்டை நோக்கிச் செல்கிறது” என்று ஒரு ஆங்கில நாளிதழிலேயே செய்தி வெளிவந்துள்ளது. ஆகவே மின்வெட்டு என்பதை மக்கள் குறிப்பாக கிராமப்புறங்களில் இருக்கும் மக்கள் அனுபவித்து வருகிறார்கள் என்பது அக்மார்க் உண்மை.

    தரமற்ற நிலக்கரி இறக்குமதி, அதில் உள்ள ஊழல் எல்லாம் தமிழக சட்டமன்றத்தில் வைக்கப்பட்டுள்ள சி.ஏ.ஜி. அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.

    மின் கொள்முதல் ஊழல் பற்றி சென்னை உயர் நீதிமன்றத்திலேயே வழக்கு தொடர்ப்பட்டு அதுவும் மின் வாரியத்தில் பணியாற்றியவரே ஒரு லட்சம் கோடி ரூபாய் ஊழல் என்று வழக்குப் போட்டாரே அதுவும் அமைச்சருக்கு தெரியாதா?

    மின் வாரியத்துறை ஊழல் தொடர்பாக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறை ரெய்டுகளையாவது அமைச்சர் ஞாபகம் வைத்துள்ளாரா அல்லது அதையும் மறந்து விட்டாரா?


    300-க்கும் மேற்பட்ட உதவிப் பொறியாளர்களை தேர்வு செய்வதற்கு நட்சத்திர ஹோட்டலில் நேர்காணல் நடத்தியதும் அமைச்சருக்குத் தெரியாதா? மின் பகிர்மானக் கழகத்தில் உள்ள களப்பொறியாளர்கள் ஆய்வுக்கூட்டங்களில் உயரதிகாரிகள் மற்றும் தலைமை பொறியாளர்களிடம் “கேபிள் கூட இல்லாமல் நாங்கள் எப்படி வேலை பார்ப்பது” என்று கேள்வி எழுப்புகிறார்களே அதுவும் அமைச்சருக்கு தெரியாதா?

    ஆகவே தமிழ்நாடு மின் பகிர்மானக் கழக நிர்வாகத்தில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் ஒரு அமைச்சர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை தன் பக்கத்தில் அமர்த்தி வைத்துக் கொண்டு பத்திரிக்கையாளர்களை சந்தித்து “அரசியல் பேட்டியை” கொடுப்பதும், அந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் கூட அமர்ந்து “ஊழலை மறைக்கும்” பேட்டிக்கு துணை போக வைப்பதும் பொறுப்புள்ள ஒரு அமைச்சரின் செயலா என்பதை முதலில் மின்துறை அமைச்சர் யோசிக்க வேண்டும்.

    அதை விடுத்து எங்கள் கழகத் தலைவர் கொடுத்த ஆதாரமிக்க அறிக்கை பற்றியும் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நிர்வாக அலங்கோலம் பற்றியும் “கேலி” செய்யும் விதத்தில் பேட்டியளிப்பது அமைச்சர் இன்னும் பொதுவாழ்வில் தன்னை பண்படுத்திக் கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது.

    ஊழலிலும், நிர்வாக சீர்கேட்டிலும், கடும் நிதி நெருக்கடியிலும் மூழ்கிக் கிடக்கும் மின் பகிர்மானக்கழகத்தை முடிந்தால் அமைச்சர் தங்கமணி சீரமைக்க நடவடிக்கை எடுக்கட்டும். அதை விடுத்து கற்பனைக் குதிரைகளை பறக்க விட்டு, ஊழல் கறையைப் போக்க முயற்சிப்பது வீண் வேலை என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

    இவ்வாறு எ.வ.வேலு கூறியுள்ளார். #DMK #AVVelu #TNMinister #Thangamani
    வெளிநாட்டில் இருந்து நிலக்கரியை இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதால் இன்னும் 15 நாட்களில் நிலக்கரி இறக்குமதி செய்யப்படும் என அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். #Minister #thangamani
    சென்னை:

    தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள மின்பற்றாக்குறை குறித்து மின்துறை அமைச்சர் தங்கமணியிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:-

    காற்றாலை மின்உற்பத்தி மூலம் பெறப்படும் மின்சாரம் கடந்த 2 நாளில் குறைந்ததாலும், மத்திய மின் தொகுப்பில் இருந்து நமக்கு வரவேண்டிய 4 ஆயிரம் மெகாவாட் வராததாலும் மின்பற்றாக்குறை ஏற்பட்டது.

    கூடங்குளத்தில் இருந்து கிடைக்க வேண்டிய 1000 மெகாவாட் மின்உற்பத்தியில் நமக்கு 3 மாதமாக மின்சாரம் தரவில்லை. ஆனாலும் நீர்மின்நிலையம், அனல் மின்நிலையங்களில் இருந்து பெறப்பட்ட மின்உற்பத்தியை வைத்து நிலைமையை சமாளித்தோம்.

    காற்றாலை மூலம் அதிகமாக மின்உற்பத்தி கிடைத்ததால் எந்த பாதிப்பும் இல்லாமல் இருந்தது. கடந்த சில நாட்களாக காற்றாலை மின்உற்பத்தி குறைந்ததால் மின்உற்பத்தி கணிசமாக குறைந்தது.

    மேலும் வடசென்னையில் 2 அனல் மின்நிலையத்தில் பழுது ஏற்பட்டது. இதில் வல்லூர் அனல் மின்நிலையத்தில் நிறுத்தப்பட்ட மின்உற்பத்தி நாளை மீண்டும் தொடங்குகிறது. இதேபோல் 210 மெகாவாட் மின்உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட பழுது 2 நாளில் சரி செய்யப்பட்டுவிடும்.



    நிலக்கரி தட்டுப்பாட்டால் மின்உற்பத்தி நிறுத்தப்படவில்லை. ஏனென்றால் 5 நாட்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பில் உள்ளது. மேற்கு வங்காளம், ஒடிசா மாநிலத்தில் பெய்து வரும் மழை காரணமாக அங்குள்ள நிலக்கரி சுரங்கத்தில் இருந்து நிலக்கரி கொண்டு வருவதில் சிரமம் ஏற்படுவது உண்மைதான். ஆனாலும் நம்மிடம் தேவையான நிலக்கரி கையிருப்பில் உள்ளது.

    வெளிநாட்டில் இருந்து நிலக்கரியை இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதால் இன்னும் 15 நாட்களில் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டு அனல் மின்நிலையங்களுக்கு அனுப்பப்படும்.

    எனவே இப்போது மின் வெட்டு இல்லை. இதுதான் உண்மை.

    இவ்வாறு அவர் கூறினார். #Minister #thangamani
    ஜெயலலிதாவின் இறப்பிற்கும், அவருக்கு தண்டனை கிடைப்பதற்கும் டி.டி.வி.தினகரன் தான் காரணம் என்று வேலூரில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் தங்கமணி குற்றம்சாட்டியுள்ளார். #TNMinister #Thangamani #TTVDhinakaran
    வேலூர்:

    வேலூரில் நேற்று நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்கூட்டத்தில் அமைச்சர் தங்கமணி பேசியதாவது:-

    ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு எடப்பாடிபழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஒரு சாமானியர்களாக இருந்து ஆட்சி புரிந்து வருகின்றனர்.

    அத்தகைய சாமானியர்களின் ஆட்சியைக் கலைத்திட திமுகவுடன் கைகோர்த்துக் கொண்டு தினகரன் செயல்பட்டு வருகிறார்.

    அவர் தற்போது தகுதி நீக்கப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களை கொண்டு மீண்டும் திமுகவுடன் கைகோர்த்து அதிமுக ஆட்சியைக் கலைக்க முயற்சித்து வருகிறார்.

    மேலும், 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு தீர்ப்பு வந்தால் ஆட்சியில் உள்ளவர்கள் சிறை செல்வர் என்றும் தினகரன் கூறி வருகிறார். அவரது 1991ஆம் ஆண்டுக்கு முந்தைய சொத்துக் கணக்கும், தற்போதைய சொத்துக் கணக்கும் வெளியானாலே யார் சிறைக்கு செல்வர் என்பது தெளிவாகிவிடும்.

    எப்போதும் சிரித்து கொண்டே இருப்பவர் தான் லூசு மோகன். அவரது இடத்தை தற்போது டி.டி.வி.தினகரன் நிரப்பி உள்ளார். எனவே அவரை இனி லூசு மோகன் என்ற டி.டி.வி. தினகரன் என்று அழைக்கலாம்.

    திருப்பரங்குன்றம், திருவாரூரில் டி.டி.வி.தினகரனின் பலம் எடுபடாது.

    25 சதவீதம் மது அவரது தொழிற்சாலையில் இருந்து தான் வருகிறது. அவருடன் உள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சர் பதவி தருவதாக ஆசை வார்த்தை கூறி வைத்துள்ளார். எங்கள் மீது பொய்யான பிரசாரம் செய்து வருகிறார்.

    தொண்டர்களுக்கு எல்லாம் தெரியும். பெங்களூரு நீதிமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு எதிராக வழக்கு இருந்த போது கருணாநிதியுடன் டி.டி.வி. தினகரன் கூட்டு வைத்துக்கொண்டு ஆட்சியையும், கட்சியையும் கலைக்க நினைத்தார்.

    அதன் காரணமாகவே லண்டன் ஓட்டல் வழக்கில் இருந்து டி.டி.வி.தினகரன் விடுவிக்கப்பட்டார். ஜெயலலிதாவின் இறப்பிற்கும், அவருக்கு தண்டனை கிடைப்பதற்கும் காரணம் டி.டி.வி.தினகரன் தான்.

    இவ்வாறு அவர் பேசினார். #TNMinister #Thangamani #TTVDhinakaran
    நாமக்கல்லில் கணினிமயமாக்கப்பட்ட தானியங்கி மின்தடை பழுது நீக்கும் மையத்தை அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார்.
    நாமக்கல்:

    நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள துணைமின் நிலைய வளாகத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள கணினிமயமாக்கப்பட்ட தானியங்கி மின்தடை பழுது நீக்கும் மைய திறப்பு விழா நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர், சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலையில், கலெக்டர் ஆசியாமரியம் தலைமையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் கணினிமயமாக்கப்பட்ட தானியங்கி மின்தடை பழுது நீக்கும் மையத்தை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி திறந்து வைத்து மின் பயனீட்டாளர்கள் அளிக்கும் புகார்கள் கணினி மூலம் பதிவு செய்து உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதை பார்வையிட்டார்.

    பின்னர் அமைச்சர் பி.தங்கமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஈரோடு மண்டல தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு உட்பட்ட நாமக்கல் மின்பகிர்மான வட்டத்திற்கு என பிரத்யேகமான கணினிமயமாக்கப்பட்ட தானியங்கி மின்தடை பழுது நீக்கும் மையம் புதியதாக அமைக்கப்பட்டு தொடங்கப்பட்டுள்ளது. நாமக்கல் மின் பகிர்மான வட்டமானது நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம், மற்றும் பரமத்திவேலூர் ஆகிய 4 கோட்டங்களும், 16 உபகோட்டங்களும், 76 பிரிவு அலுவலகங்களும் அடங்கியதாகும்.

    நாமக்கல் மின்பகிர்மான வட்டத்தில் மொத்தம் 6,36,000க்கு மேல் மின் பயனீட்டாளர்கள் உள்ளனர். இதில் வீட்டு மின் இணைப்புகள் மட்டும் 4,06,273 ஆகும்.

    நாமக்கல் மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட அனைத்து மின் பயனீட்டாளர்களும் 24 மணிநேரமும் செயல்படும் கணினிமயமாக்கப்பட்ட தானியங்கி மின்தடை பழுது நீக்கும் மையம் கட்டணமில்லா தொலைபேசி எண் 1912 அல்லது 180042519124 (அனைத்து வாடிக்கையாளர்கள்)-ஐ தொடர்பு கொண்டு தங்களது மின்தடை பழுதுகளை சரி செய்து கொள்ளலாம். மின் பயனீட்டாளர்கள் மேற்கண்ட இலவச மின்சாரவாரிய சேவையை உபயோகித்து பயன்பெற வேண்டும். மின்தடை பழுது புகார்கள் உடனுக்குடன் சம்பந்தப்பட்ட களப்பணியாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டு விரைந்து சரிசெய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் கணினிமயமாக்கப்பட்ட தானியங்கி மின்தடை பழுது நீக்கும் மைய சேவை குறித்த துண்டு பிரசுரங்களை அமைச்சர் பி. தங்கமணி பொதுமக்களுக்கு வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் ஈரோடு மண்டல தலைமைப் பொறியாளர் சந்திரசேகர், நாமக்கல் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சந்தானம் உள்பட அனைத்து பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
    தமிழகத்தில் மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படுவது உறுதி என அமைச்சர் தங்கமணி கூறினார். #MinisterThangamani
    நாமக்கல்:

    தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி நேற்று நாமக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடந்த 2014-ம் ஆண்டு தமிழகத்தில் சுமார் 6,800 மதுக்கடைகள் இருந்தன. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பதவி ஏற்ற போதும், தற்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்றபோதும் தலா 500 மதுக்கடைகளை மூடினர்.

    அதன் பிறகு படிப்படியாக மேலும் 1,000 மதுக்கடைகள் மூடப்பட்டன. தற்போது 4,800 மதுக்கடைகள் மட்டுமே உள்ளன. பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி படிப்படியாக மதுக்கடைகளை மூடுவதில் உறுதியாக இருக்கிறோம். இதில் மாறுபட்ட கருத்து இல்லை.

    மதுக்கடைகளின் எண்ணிக்கை குறைந்து இருப்பதால், அவற்றில் பணி புரிந்த பணியாளர்களுக்கு வேறு துறையில் பணியிடங்களை ஒதுக்கி கொடுக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. வேறு துறைக்கு செல்லும் டாஸ்மாக் பணியாளர்கள் தங்களுக்கு இதே முன்னுரிமை வழங்க வேண்டும் என கேட்டு வருகின்றனர். ஆனால் இதர துறைகளில் உள்ளவர்கள் அதற்கு ஆட்சேபனை தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

    இருப்பினும் கல்வித்தகுதி அடிப்படையில் எழுத்துத்தேர்வு நடத்தி இளநிலை உதவியாளர் நிலையிலான பணியிடம் வழங்க முடிவு செய்து உள்ளோம். அதற்கான எழுத்துத்தேர்வு அடுத்த மாதம் (செப்டம்பர்) நடக்கிறது.

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், அதற்கு பணியாற்ற வசதியாக மூத்த அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்து உள்ளார். அந்த விவகாரத்தில் கட்சியின் தலைமை எடுக்கும் முடிவுக்கு அனைவரும் கட்டுப்படுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #MinisterThangamani
    ×